×

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துக : ஒன்றிய அரசு கடிதம்!!

புதுடெல்லி:தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய உள்துறை செயலாளர் அவசர கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தாலும் சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நவராத்திரி, தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து வர இருக்கும் பண்டிகைகளின் போது கொரோனா தடுப்புகள் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிப்பது அவசியமான ஒன்றாகும். மிகுந்த எச்சரிக்கையுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக திருவிழாக்கள், கூட்டங்கள், மத நிகழ்வுகள் போன்றவை மூலம் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம். எனவே மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் வரும் ஒவ்வொரு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக மருத்துவமனை வசதி, ஐ.சி.யு. படுக்கை வசதி ஆகியவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களுடைய மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற நேரத்தில் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும். அதேநேரத்தில் தடுப்பூசி போடும் பணியையும் அதிகரிக்க வேண்டும். முதியவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இரண்டாவது டோசுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Deepavali , தீபாவளி
× RELATED நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்